ஜவார்லாலும் பொது உடமையும். புரட்சி - தலையங்கம் - 17.12.1933 

Rate this item
(0 votes)

தோழர் ஜவர்லால் அவர்கள் தனது அரசியல் கொள்கையை விளக்கி பிரிட்டீஷ் ஜனங்களுக்குத் தெரியச் செய்வதற்காக ஒரு லண்டன் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் பொதுவுடமைக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக வும், ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் கொள்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும், அத்தகைய பொது வுடமைக் கட்சியைத் தான் சேர்ந்தவரல்லவென்றும் குறிப்பிட்டிருப்பதாக ராய்ட்டர் தந்தி கிடைத்திருக்கிறதாகப்பத்திரிக்கைகளில் காணக் கிடக்கிறது. இது உண்மையானால் தோழர் ஜவார்லாலுக்கு இந்தக் குணம் காந்தியாரின் சாவகாசத்தால் ஏற்பட்ட குணம் என்றுதான் சொல்லவேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாரிடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ் விதத் தந்திர மொழிகள் கூறி இருகட்சியாரையும் ஏமாற்றிப் பெருமை அடைவதை அனுசரித்துவருகிறார். உதாரணமாக 

"வர்ணாச்சிரமதர்மம் வேண்டும். ஆனால் எனது வர்ணாச்சிரமம் வேறு” என்பார். 

"ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் எனது ராமன் வேறு என்பார். 

"ஜாதிபாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்துவேறு” என்பார். 

"ராஜாக்கள், ஜமீன்தார்கள் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார். 

"பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார். 

"ஏழைகள், தொழிலாளர்கள் க்ஷேமமாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்கக்கூடாது” என்பார். 

 

"தீண்டாமை ஒழியவேண்டும். ஆனால் தீண்டப்டாதவர்கள் சூத்திரர் களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார். 

"தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்கவேண்டும்” என்பார். 

இந்தப்படி எந்த விஷயங்களிலும் “ஆனால்” போட்டுத் திருப்பி விடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள். 

அதுபோலவே தோழர் ஜவார்லால் அவர்களும் ஆனால்” போட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது மிக்கப் பரிதபிக்கத் தக்கதாகயிருப் பதுடன் நமக்கு ஒருபெரும் ஏமாற்றத்தைத் தரத்தக்கதாகவும் இருக்கிறது. 

தோழர் ஜவார்லால் அவர்கள் இதற்கு முன்னும் இப்படி இரண் டொருதடவை செய்திருந்தாலும் அதாவது தனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லையென்று சொல்லிவிட்டு பிறகு தனது தகப்பனார் எலும்பைக் கங்கையில் கொண்டு போய் கொட்டி தகப்பனுக்கு மோட்சத்தைத் தேடி யிருந்தாலும். 

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை முதலில் ஆட்சேபித்துவிட்டு பிறகு அதை ஒப்புக்கொண்டு பிறகு அதை “அது ஒரு ராஜி ஒப்பந்தமல்ல. ஆனால் சண்டையில் இருகட்சியாரும் இளைப்பாறுவதற்காகச் செய்து கொண்ட மத்தியகால ஓய்வு. ஒப்பந்தம்” என்று சொல்லி யிருந்தாலும் இனி அப்படிச் செய்யமாட்டார். ஒரே உறுதியாய் இருப்பார். காந்தியாரின் தாட்சண்யத்துக்கும் கட்டுப்படமாட்டாரென்று இருந்தோம். 

இப்பொழுது அந்த நம்பிக்கை ஏமாற்றமடையத் தக்கவண்ணம் பல்டியடித்திருக்கிறார். “நான் ஒரு பொதுவுடைமைக் கொள்கைக்காரன், ஆனால் ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் பொது உடமையை நான் சேர்ந்தவனல்ல” என்று சொல்வதில் இந்திய பாமர ஜனங் களையும் வாலிபர்களையும் ஒருபுறமும், பிரிட்டிஷ் ஜனங்களையும், செல்வ வான்களையும் மற்றொருபுறமும் திருப்தி செய்யத்தக்க அம்சம்தவிர இதில் வேறு ஏதாவது சரக்கு இருக்கின்றதா என்பது நமக்கு விளங்கவில்லை. 

அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான தலைவர்களின் இவ்வித அபிப்பிராயங்களால் உண்மையும் அவசியமுமான கொள்கைகளும் அதை அமுலுக்கு கொண்டுவர முயற்சிக்கும் மக்களு டைய உழைப்பும் எவ்வளவு தூரம் பாதிக்கப்படத்தக்கதாகி விடுகின்றது என்பதை நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை. ஒரு சமயம் இவ்வித அபிப்பிராயத்தை தோழர் ஜவார்லால் அவர்கள் “தனக்கு தோன்றியதை வஞ்சனை இல்லாமல் வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றும் உள் எண்ணம் இல்லை” என்று சொல்லுவதானால் தோழர் ஜவார்லால் தனது பொது உடமைக் கொள்கைகள் என்பவை எவை? பொதுஜனங்களால் சொல்லிக் கொள்ளப் படுகின்ற பொது உடமைக்கொள்கைகள் என்பவை எவை? அவை இரண்டிற்குமுள்ள வித்தியாசங்கள் எவை? என்பவைகளை விளக்கி இருப்பாரானால் அது மிக்க அழகாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் இந்தியாவுக்கு வேண்டிய பொது உடமைக்குதானே தான் பாஷ்யக்காரர் என்பதாக ஆகவேண்டுமென்றோ அல்லது பொதுஉடமைக் கொள்கை களை குற்றமாக சர்க்கார் கருதுவார்களானால் " எனது பொது உடமைக்கு அருத்தம் வேறு” என்று சொல்லுவதற்கு இடம் இருக்கட்டும் என்றோ அல்லது வேறு என்ன காரணத்தாலோ இப்படிக் குழப்புவாரானால் அது மனித சமுகத்தின் முற்போக்கை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம். 

எந்தக்காலத்தில் அரசியல் என்னும் பேரால் இங்கிலீஷ் படித்த வக்கீல் கூட்டம் வியாபாரம் செய்யத் தொடங்கினார்களே அன்றுமுதல் இன்றுவரை பொது வாழ்வு இந்தப்படியாகவே பாம்புக்கு வாலும், மீனுக்கு தலையுமாக காட்டும் தோரணையில் நடந்தேவந்து தேசம் முற்போக்கடைவது கெட்டுப்போனதுடன் சுமார் 25, 30 வருஷங்களுக்கு முன் இருந்த நிலை மைக்கு பின் தள்ளப்பட்டும் போயிற்று. குறைந்த அளவு காந்தியாரின் ஆதிக்கம் இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லையானால் இந்தியாவில் இன்றைக்கு எவ்வளவோ பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டு ஒரு பயனுள்ளதும் பொறுப்புள்ளதுமான புரட்சி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று உறுதியாய்க் கூறுவோம். காந்தியாரின் எண்ணம், பேச்சு, எழுத்து செய்கை எல்லாம் பிற்போக்கிற்கே ஆதரவாய் இருந்திருக்கின்றதுடன் மக்களின் எழுச்சிகள் அடங்கி, சுய அறிவும் ஒடுங்கி மக்களுக்குள் மழுங்கிக் கிடந்த மத எண்ணங் களை தலைதூக்கினதுடன் வெறுக்கப்பட்டுக் கிடந்த பழமைகளும் புத்துயிர் பெற்று விட்டன. இனி நாடு முற்போக்கடையாவிட்டாலும் காந்தி காலத்தில் ஏற்பட்ட தீங்கான பிற்போக்குகள் மாறுவதற்கு இனியும் குறைந்தது 10 வருஷத்துக்காவது பலமான முறட்டு முயர்ச்சிகள் வேண்டும் என்றே சொல்லுவோம். இந்நிலையில் தோழர் ஜவார்லால் நிலைமை இப்படியானது பற்றி எவரும் வருந்தாமலிருக்க முடியாது. நிற்க, 

பொதுவுடமை என்பதுபற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை. எந்த அர்த்தத்தில் பொதுவுடமையை எடுத்துக்கொண்டாலும் அதற்கு எப்படிப்பட்ட வியாக்கியானம் செய்வதாயிருந்தாலும் பலாத்காரச் செயலில் பிரவேசமில்லாமல் பலாத்காரத்தைப் பிரசாரம் செய்யாமல் பொதுவுடமைத் தத்துவம் ஏற்பட பிரசாரம் செய்வதில் முயற்சி செய்வதில் எவ்வித தப்பித மும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம். இதை சென்ற வருஷமே தெரிவித்து இருக்கிறோம். அதற்குப்பிறகு பல அரசாங்க உயர்தர நீதிஸ்தல தீர்ப்பு களும் தாராளமாய் இருக்கின்றன. 

சென்ற வாரத்தில் கல்கத்தா பிரசிடெண்சி மேஜிஸ்டிரேட் தோழர் எஸ்.கே.சின்ஹா அவர்கள் ஒரு வழக்கில் ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். அவ்வழக்கின் எதிரியானவர் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு அதன் லட்சியம் என்பதாக வகுக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் அவ்வளவையும் அப்படியே குறிப்பிட்டு பிரசாரம் செய்து வந்திருக்கிறார். அதை மேஜிஸ் திரேட் அப்படியே எடுத்துத் தனது ஜட்ஜ்மெண்டில் குறிப்பிட்டு அந்தப்படி ஒருவன் பிரசாரம் செய்வது எவ்வித குற்றமுமாகாதென்றுகூறி எதிரியை விடுதலை செய்திருக்கிறார். அதை மற்றொரு பக்கம் காணலாம். 

அன்றியும் உலக செல்வங்களான பொருள்களும், பூமிகளும் பொது ஜனங்கள் எல்லோருக்கும் சொந்தமாக்கப்பட்டு அவற்றின் பலன்கள் எல்லோருக்கும் பொதுவாக சரிசமமாக இருக்கும்படி செய்வதையும் அதற்கு ஏற்றதொரு ஆட்சியை ஏற்படுத்தி நடத்துவதில் பொதுஜனங்கள் எல்லாருக்கும் உரிமை இருக்கும்படி செய்வதும் ஆன பொதுவுடைமைக் கொள்கையானது குற்றமானது என்பதாக இதுவரை எந்த அரசாங்கமும் கூற வில்லை. மேலும் உலகிலுள்ள எல்லா அரசாங்கங்களும் இக்கொள்கை யைப் பிரசாரம் செய்ய அந்தந்த நாடுகளில் இடம் கொடுத்தே வருகின்றன. 

இவை ஒரு புறமிருக்க நாமும் நமது பகுத்தறிவைக் கொண்டு யோசிப்போம், 

உதாரணமாக, ஒரு தனிப்பட்ட மனிதன் சமூக வாழ்வில் எந்தக் காரணத்தினாலோ உயர்ந்த ஜாதியானாகப் பாவிக்கும் யோக்கியதையை அடைந்து சில தனி உரிமைகளை அடைந்து வருவதை இன்றையதினம் நாம் ஆக்ஷேபித்து அப்படிப்பட்ட ஒரு தனி உரிமை யாவருக்கும் இருக்க வேண்டும் என்றும், அது எல்லோருக்கும் சரி சமத்துவமாய் இருக்க வேண் டும் என்றும், அதன் நிருவாகம் எல்லோருக்குமே இருக்கவேண்டும் என்றும் கூறுகிறோம். இவற்றிற்கு சில சட்ட இடையூறுகள், பழக்க வழக்க இடையூறு கள் இருந்தாலும் அவைகளையும் மாற்றிப் புதிய சட்டங்களையும், புதிய பழக்கங்களையும் செய்யவேண்டுமென்கின்றோம். 

இப்படிச் சொல்வது அவ்வுயர் ஜாதிக்காரனுக்குத் துவேஷமாகவோ, அல்லது வேறு ஏதாவதொரு தப்பிதமாகவோ இருக்கின்றது என்று கருதி நாம் குற்றவாளிகளாக்கப்படுகிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்... 

அதுபோலவே ஒரு தனிப்பட்ட மனிதன் எந்தக் காரணத்தினாலோ ஒரு நாட்டை லட்சக்கணக்கான ஜீவன்களையும். ரூபாய்களையும் பறி கொடுத்து ஜெயித்து அரசனாகி ஏக சக்கிராதிபதியாகி அந்நாட்டின் மீது ஆதிக்கம் பெற்று வெகுகாலமாக ஆட்சி செலுத்தி பெருமையடைந்து வருவதை இன்று நாம் ஆக்ஷேபித்து “ஒரு நாட்டை ஆளும் பொறுப்பு அந்த நாட்டு ஜனங்களாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கவேண்டுமே ஒழிய சண்டையிட்டு ஜெயித்து விட்டதினாலேயே ஒரு தனிப்பட்ட மனிதன் அந்நாட்டை தனக்கு சொந்தமென்று ஆளுவது-அதிகாரம் செலுத்துவது என்பவை எங்களுக்கு இஷ்டமில்லை. ஆதலால் அதை மாற்ற நாங்கள் கிளர்ச்சி செய்வோம், புரட்சி செய்வோம். அதற்கு ஏற்ற சட்டங்கள் செய்து கொள்ளவும் முயற்சிப்போம். இதை யார் தடுத்தாலும் அத்தடுப்புக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம்” என்று சொல்லுகின்றோம். 

இப்படிச் சொல்லுவது இன்று எந்த சட்டத்திற்கு உள்பட்டது? அல்லது எந்த சட்டப்படி குற்றமாகப் பாவிக்கப்படுகின்றது. இதை எந்த அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகிறது? ஏதாவது ஒரு அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகின்றது என்றாலும் அதற்காக எல்லோரும் பயந்து அக்கிளர்ச்சியை விட்டுவிடுகிறோமா? 

அதுபோலவே தான் ஒரு தனி மனிதன் எந்தக் காரணத்தினாலேயோ செல்வங்கள் தன் கைக்கு வரும்படியான முறைகள் செய்து நாட்டு மக்கள் பாடுபட்டு உழைக்கும் பயன்கள் தனக்கு வந்து சேரும்படியான ஏற்பாடு செய்து அதன் மூலம் ஒருவன் பொருளும், பூமியும் சேர்த்துப் பணக் காரனாகிவிட்டால் அந்தச் செல்வத்தைப் பொது ஜனங்கள் பார்த்து "அது எங்களுடைய செல்வம், நாங்கள் பாடுபட்டதால் நீ சேர்த்துக்கொள்ள முடிந் தது. ஆதலால் எங்கள் எல்லோருக்கும் அதில் அனுபவமும் ஆதிக்கமும் இருக்க வேண்டுமென்று சொன்னால், அல்லது அதற்கேற்ற சட்டங்கள் செய்ய வேண்டுமென்று சொன்னால் இது எந்த சட்டப்படி குற்ற மாகும்? இதை யார் எப்படி ஆக்ஷேபிக்க முடியும்? என்பது நமக்கு விளங்கவில்லை. 

உலக வாழ்க்கையின் எந்தக் கொள்கையையும், எந்த திட்டங்க ளையும். எந்த அனுபவங்களையும் புரட்டி, அல்லது மாற்றி அமைத்துக் கொள்ளவும் அனுபவத்தில் கொண்டுவரவும் மனித சமூகத்திற்கு உரிமை யுண்டு என்பதை யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. ஆளும் மனிதனுக்கும், ஆளப்படும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படியோ அப்படித்தான் செல்வவான்களுக்கும். பாட்டாளிகளான ஏழை மக்களுக்கும் உள்ள சம்பந்தமாகும். 

ஒரு கொடுங்கோல் அரசன் எப்படி தனது ஆட்சிக்குப் பீரங்கியை யும். துப்பாக்கியையும், வெடிகுண்டையும், பட்டாளத்தையும் காவலாக வைத்திருக்கிறானோ அதுபோல்தான் ஒரு செல்வவான் தனது செல்வத் துக்குக் கச்சேரி யையும், சிறையையும், போலீசையும் ஆதரவாய் வைத் திருக்கிறான். ஒரு கொடுங்கோலரசை ஒழிப்பதற்கு எப்படி நாம் பீரங்கியை யும். துப்பாக்கியையும், வெடிகுண்டையும் கையாளுகின்ற மக்களைக் கூப்பிட்டு “தோழர்களே அரசர்கள் சொல்படி கேளாதீர்கள். இனி இதில் சம்பந்தப்படாதீர்கள். விலகி எங்களுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். கடைசி யில் நம் எல்லோருக்கும் பொறுப்பும் பங்கும் பெறலாம்” என்று சொல்ல வேண்டுமென்கிறோமோ அதுபோல்தான் தனிப்பட்ட மனிதனின் செல்வத் தன்மையை ஒழிப்பதற்கும் அதை பொதுவாக்குவதற்கும் அதே போன்ற வழிகளைப் பின்பற்ற வேண்டியதாகும். 

அதுபோல்தான் உயர்ந்த ஜாதி என்னும் பேரால் தனிப்பட்ட உரிமை களை அடைந்து வருவதையும் ஒழிக்க அப்படிப்பட்ட வழிகளை பின் பற்ற வேண்டியதாகும். இவைகளை எல்லாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் குற்றம் என்றோ சட்ட விரோதமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.

ஆதலால் மனிதசமூக வாழ்க்கையில் மாறுதல்களைச் செய்வதிலும் புதிய வாழ்க்கை முறைகளைப் புகுத்துவதிலும் மனித சமூகத்துக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் இருத்தவேண்டும் என்பது நமது அபிப்பிராயம். அதற்கு இடமில்லாத மனிதசமூகத்தை சுயமரியாதை அற்ற சமூகம் என்றேதான் சொல்லவேண்டும். 

ஆனால் இப்படிப்பட்ட காரியங்களால் உயர்நிலையில் இருப்பவர் களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அதனால் எதிர்ப்பும் ஏற்படலாம். இவை யும் இயற்கையேயாகும். அப்படிப்பட்ட அதிருப்திகள் எதுவும் நீடித்து நிற்காது. ஒரு அரைத் தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்து விடும். பிறகு உலக சுபாவமே - வாழ்க்கை முறையே இப்படித்தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுவிடும். பிறகு அதிருப்தியோ எதிர்ப்போ ஆன காரியங்களுக்கு இடமே இருக்காது. 

ஆதலால் இதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. பின் வாங்கவும் வேண்டியதில்லை. 

புரட்சி - தலையங்கம் - 17.12.1933

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.